அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
Monday, 31 December 2012
இந்தக் காலத்துப் பிள்ளைகள் எல்லாம் பொறுப்பில்லாதவர்கள். கடும் உழைப்புக்கு அஞ்சுபவர்கள். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் அவர்களுக்கும் ரொம்ப தூரம்' இப்படியெல்லாம் கருத்துகள் உங்களுக்கு இருந்தால், உடனே மாற்றிக் கொள்ளுங்கள்.
நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி ஒருவர், ஒன்றல்ல, இரண்டல்ல, எட்டு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார். அதற்கு இந்திய அளவிலும், உலக அளவிலும் விருதுகள் கிடைத்திருக்கின்றன. அந்த மாணவி மாஷா நஸீம்.
சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் மின்னியல், மின்னணுவியலில் மூன்றாமாண்டு பொறியியல் படிக்கும் அவரிடம் பேசினோம்:
""எனக்குச் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரவிபுதூர்கடை. அப்பா காஜா நஜீமுதீன் நாகர்கோயிலில் கருவூலத்துறையில் வேலை செய்கிறார். எனக்குச் சிறுவயதில் இருந்தே எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. நான்காவது படிக்கும்போது, "பர்க்லர் அலார்ம்' என்ற ஒரு கருவியைக் கண்டுபிடித்தேன். திருடர்கள் வந்தால் மணி ஒலித்து எச்சரிக்கை செய்யும் கருவி அது. அதற்கு நிறையப் பாராட்டுகள் கிடைத்தன. நாம் வாஷ் பேசினின் முன் நின்றால் குழாயிலிருந்து தானாகவே தண்ணீர் கொட்டும். வாஷ் பேசினை விட்டு அகன்றால், தண்ணீர் நின்றுவிடும். இதற்கு போட்டோ எலக்ட்ரிகல் செல் பயன்படுகிறது. இந்த அடிப்படையில் நான் உருவாக்கியதுதான் பர்க்லர் அலார்ம் கருவி.
2005 ஆம் ஆண்டில் ரயில்வே அமைச்சர், "ரயில் பாதைகளை அசுத்தப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்' என்று எச்சரித்த செய்தியை நாளிதழ்களில் படித்துவிட்டு நான் உருவாக்கியதுதான் அதி நவீன ரயில் கழிப்பறை.
ரயிலில் பயணம் செய்யும் சிலர், நிலையத்தில் ரயில் நிற்கும்போது, கழிப்பறையைப் பயன்படுத்துவார்கள். இதனால் ரயில் நிலையம் தூய்மையற்றுப் போகும். இதைத் தடுக்க 2005 இல் கண்டுபிடித்ததுதான் அதி நவீன ரயில் கழிப்பறை.
நிலையத்தில் ரயில் நிற்கும்போது, ரயில் பெட்டிகளில் உள்ள கழிப்பறையின் அடியில் உள்ள திறந்த பகுதி மூடிக் கொள்ளும். நிலையத்தைவிட்டு ரயில் கிளம்பிய பிறகு, ஓட்டுநர் அந்த மூடியைத் திறந்துவிடும்படியான ஏற்பாடு உள்ளதுதான் நான் கண்டுபிடித்த இந்த அதி நவீன ரயில் கழிப்பறை.
இந்தக் கண்டுபிடிப்புக்கு ஆரம்பத்தில் வரவேற்பு இல்லை. மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் அதற்கு ஆறுதல் பரிசு கூடக் கிடைக்கவில்லை. ஆனால் அதற்குப் பிறகு செகந்தராபாத்தில் நடந்த தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் முதற்பரிசு கிடைத்தது. புதுதில்லியில் நடைபெற்ற உலக கழிப்பறைச் சுகாதார மாநாட்டின் அங்கீகாரமும் கிடைத்தது. குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பாராட்டையும் அது பெற்றது. இது எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது.
என்னுடைய இன்னொரு கண்டுபிடிப்பு, இயந்திரச் சுமை தூக்கி. ரயில்நிலையங்களில், விமானநிலையங்களில், பேருந்துநிலையங்களில் வயதானவர்கள், அவர்களால் தூக்க முடியாத பெரிய சுமைகளைச் சுமந்து கொண்டு வருவார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் ஒரு கருவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டதுதான் இயந்திரச் சுமைதூக்கி. சாதாரணமாக நாம் பார்க்கும் சுமையை ஏற்றும் டிராலிகளில் உயரத்தை மாற்ற முடியாது. இதனால் சுமைகளை தூக்கி அதன் மேல் வைக்க வேண்டும். வயதானவர்களால் தூக்கி வைக்க முடியாது. நான் கண்டுபிடித்துள்ள கருவியில் சுமை எந்த உயரத்தில் உள்ளதோ, அந்த உயரத்துக்கு டிராலியில் பொருள் வைக்கும் பகுதியை உயர்த்த முடியும்.
இந்த இயந்திரச் சுமை தூக்கியை வீடுகளில் கூடப் பயன்படுத்தலாம். எரிவாயு சிலிண்டர், தண்ணீர் கேன் போன்றவற்றை உயரமான இடத்தில் வைக்கவோ, உயரமான இடத்தில் இருந்து இறக்கி வைக்கவோ இயந்திரச் சுமை தூக்கி உதவும்.
பாளையங்கோட்டையில் ஊசி கோபுரம் அருகே, பள்ளி மாணவர்கள் சாலையைக் கடப்பதற்காக ஒரு பாலம் உள்ளது. பள்ளி மாணவர்கள் முதுகில் புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு அதில் ஏறுவதற்குச் சிரமப்பட்டு, சாலையைக் கடந்து செல்வார்கள். இதற்குத் தீர்வாக சாலைக்கடியில் பிரிட்ஜ் மாதிரி கன்வேயர் பெல்ட் அமைத்து, அதில் புத்தகப் பையை வைத்து, பெடல் பண்ணினால், சாலையின் இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கத்துக்குப் புத்தகப் பை போய்விடும். என்னுடைய இந்தக் கண்டுபிடிப்பும் எல்லாருடைய பாராட்டுகளையும் பெற்றது.
சமீபத்தில் நான் கண்டுபிடித்தது. நெருப்பில்லாத முத்திரை வைப்பான். இதைக் கண்டுபிடிப்பதற்கும் காரணம் இருந்தது. 2008 ஆம் ஆண்டில் பள்ளியிறுதித் தேர்வில் மாணவர்களால் எழுதப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடைத்தாள்களை பையில் வைத்துச் சீல் வைக்கும்போது, அதில் நெருப்பு பட்டு எல்லாம் எரிந்து போனது. நெருப்பில்லாமல் சீல் வைக்கும் கருவியை உருவாக்குவதற்கான எண்ணம் அப்போது ஏற்பட்டது.
என் அப்பா கருவூலத்துறையில் வேலை செய்கிறார். பள்ளி முடிந்ததும் அவருடைய அலுவலகத்துக்கு அவரைப் பார்க்கப் போகும்போது, அங்கே சீல் வைப்பதைப் பார்த்திருக்கிறேன். சீல் வைக்கும் அலுவலக உதவியாளர் வரும் வரை காத்திருப்பார்கள். சீல் வைக்கும்போது நெருப்பு பட்டு கையில் காயம் ஏற்பட்டதையும் பார்த்திருக்கிறேன்.
இவற்றையெல்லாம் தவிர்க்கவும், யார் வேண்டுமானாலும் பயன்படுத்தும்விதமாகவும் உள்ள கருவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படி உருவானதுதான் நான் கண்டுபிடித்துள்ள நெருப்பில்லாத முத்திரை வைப்பான்.
இந்தக் கருவிக்கு நிறைய வரவேற்பு கிடைத்தது. பாராட்டுகளும் கிடைத்தன. எலெக்ஷன் கமிஷன் தேர்தலின் போது எனது சீல் வைக்கும் கருவியைப் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு வாக்குச் சாவடிகளில் சீல் வைக்க என்னுடைய நெருப்பில்லாத முத்திரை வைப்பான் பயன்படுத்தப்பட்டது.
இப்போது நிறைய அறிவியல் கண்காட்சிகள் நடக்கின்றன. மாணவர்கள் பலர் அவற்றில் ஆர்வமுடன் பங்கேற்கிறார்கள். தொழில்நுட்பரீதியாக முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. பலர் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் துடிப்புடன் இருக்கிறார்கள்.
இதை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும். இப்போது விளையாட்டுத்துறையில் திறமைமிக்கவர்களுக்கு அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் சிறப்பு ஒதுக்கீடுகள் இருப்பதைப் போல, புதியனவற்றைக் கண்டுபிடிப்பவர்களுக்கும் ஒதுக்கீடுகள் அளித்தால், புதிய கண்டுபிடிப்புகள் அதிகரிக்கும்.
அதுமட்டுமல்ல, நான் படித்த கல்வி நிறுவனங்கள் என்னை ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள். அப்பா காஜா நஜீமுதீன், அம்மா சுமையா பேகம், தங்கை இன்ஷா நஸீம் எல்லாரும் என்னை எப்போதும் உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள். இதைப் போன்ற சூழ்நிலை அமையப் பெற்ற யாரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும் என்பதே என் நம்பிக்கை'' என்கிறார் அந்த இளம் சாதனையாளர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment