Monday, 21 January 2013

முஸ்லிம் பெண்களுக்கு கல்வி: ம.பி., மதரசாக்கள் நாட்டுக்கு வழி காட்டுகின்றன!


முஸ்லிம் பெண்களுக்கு கல்வி அளிப்பதில் மத்தியப் பிரதேச மதரசாக்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்கு வழிகாட்டுகின்றன. போபாலில் செயல்படும் மதரசாவில் 60% இடங்களை பெண்களே ஆக்கிரமித்துள்ளனர்.

இந்தப் பள்ளியில் பயிலும் சம்ஷத்  என்ற பெண், தான் ஒரு பொறியாளராக வர வேண்டும் என்ற தன் கனவைத் தெரிவிக்கிறார். வழக்கமான ஆங்கிலப் பள்ளிக் கல்வி முறையில் வராவிட்டாலும் கூட, மதரஸாவில் இயல்பான கல்வி கற்றுக் கொடுக்கப்படுவது இந்த மாற்றத்துக்குக் காரணம்.  இந்தியத் திருநாட்டின் மையப் பகுதி நகராக விளங்கும் போபாலில் நவாப்புகள், பேகம்கள், மதரஸாக்கள் எல்லாம் முஸ்லிம் பெண்களின் முன்னேற்றத்துக்கு அவர்களுக்குக் கல்வி அளிப்பதே சிறந்த வழி என்று செயல்படுகிறார்கள்.
இந்தப் பள்ளியில் பயிலும் சம்ஷத், “எங்களுக்கு அனைத்து விதமான கல்வியும் இந்த மதரஸாவில் அளிக்கப்படுகிறது. குர்ஆன், ஷரீப், உருது, அரபிக், அறிவியல், கணிதம், ஆங்கிலம்.. இவ்வளவு ஏன்... இந்த உலகை எதிர்கொள்வதற்கான அனைத்தும் எங்களுக்கு பயிற்றுவிக்கப் படுகிறது. இப்போது நான் ஒரு பொறியாளராக ஆசைப்படுகிறேன்” என்றார்.
சனா என்ற மாணவி கூறும்போது, “நான் ஒரு மருத்துவராக ஆசைப்படுகிறேன்.  மதராஸாவில் பயிலும் எனக்கு என் கனவுகள் சாத்தியமே” என்கிறார். சம்ஷத், சனா போல் பல பெண்களும் தங்களுக்குள் கனவுகளை வளர்த்துக் கொண்டுள்ளனர்.  முஸ்லிம் சமுதாயத்தில் பெண் கல்விக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் ஒரு அடையாளமாகவே வெளித்தெரிகிறது.
மத்தியப் பிரதேசத்தில் 5300 மதரசாக்கள் உள்ளன. இங்குள்ள 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களில் 60 சதவீதம் பெண்களே! அதுபோல், பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தப் பள்ளியில் பயிலும் இளைய தலைமுறையினரோ, தங்களுக்குள் விவாதக் கலாசாரத்தை வளர்த்துக் கொண்டு உலகை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தயாராகின்றனர்.
மதரசா போர்டின் தலைவர் ரஷித் கான் இது குறித்துக் கூறுகையில், “இது எங்களுக்குப் பெருமை தரக்கூடிய ஒன்று. பொதுவாக, முஸ்லிம் சமுதாயத்தில் பெண்கள் கொடுமைப் படுத்தப் படுவதாகவும், சிரமப் படுவதாகவும் வெளித்தோற்றம் உள்ளது. ஆனால் இந்த நிலை மாறும். இங்கே மத்தியப் பிரதேச அரசு எங்களுக்கு மதிய உணவுக்கு உதவுகிறது. மேலும், மதரஸாவில் கல்விச் சிறப்புக்கு பல வகையிலும் உதவிகள் செய்கிறது.” என்றார்.
மத்தியப் பிரதேசத்தில் மதரசாக்களில் பயிற்றுவிக்கப்படும் மதக் கல்வியோடு இணைந்த நவீன கல்வி மூலம் முஸ்லிம் பெண்களும் இளைய தலைமுறையும் தங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்கின்றனர்.

No comments:

Post a Comment